மறை பொருள் விலக்கிய விளக்கே Veil removing Light
மறை பொருள் ஒன்று திரையின் பின்னே விளங்காமல் மறைந்திருந்தது மறைவான அப்பொருளை மறைத்த திரை விலக்கி விளக்க வந்த திரு விளக்கே உணர்ச்சியால் உணர முடியாத உன்னதத்தை உணர்வால் உணவால் உணர வைத்த உள்ளொளியே வாடிய பயிரையும் வாடாமல் காக்க வாரி வாரி வழங்கிய வள்ளலே நீ விரித்த கடையில் நான் வாங்கிய அக(ல்) விளக்கு அகன்றது என் முன் திரை அகண்டது என் விழித்திரை மறந்தது நித்திரை மரணமில்லா பெருவாழ்வை வந்தவர்கெல்லாம் வாரி வழங்கிய வள்ளல் பெருமானே நான் யார் ? என்று வினவிய அவர் அம்மலை வலம் வர சொன்னார் அம்மணம் மிகு மலையை வலம் வந்து இடம் நின்ற உண்ணா முலையை அடி ஒற்றி முடி காண அருட் பிரகாசமாய் அது பரவியது அண்ணாந்து அவ்வொளியைப் அண்ணாக்கு ஓட்ட அகத்தின் உள்ள அடக்க பார்த்தேன் அது கடை விரித்தது அதனை கொள்வாரில்லை அடக்கமில்லா அஜ்ஜோதி மரணமில்லா பெருவாழ்வு அளிக்க தனிப் பெருங்கருணையால் பிறவிக் கடலை நீந்தும் கலையை கற்பிக்க கருவறை வெளி வந்ததம்மா அவ்வெளிச்சம்