களக்காடு கிருஷ்ணனை பாடுவோம்
களைமிகு காட்டானை
புலிமிகு காட்டாறை
குழல் கொண்டு
ஊதும் மேய்ப்பானை
வெண்ணைமிகு
மண்பானை
உண்டும் தவழ்வானை
வானம் பொழிவானை
வணங்கும் தமிழ் மண்ணே
இந்த எழில்மிகு திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை தொடரின் அடர்ந்த காடுகள் புலிகளின் வாழ்விடத்தால் புகழ்பெற்ற களக்காடு மலைதொடரின் அடிவாரத்தில் இருக்கும் களக்காடு என்னும் சிற்றூரில் கையில் வெண்ணையுடன் யாதுமறியா பாலகன் யாதுமாகி நிற்கின்றான் அந்த யதுகுல திலகம்.
மிக சமீபத்தில் அவன் எங்களை எந்த முன்னறிவிப்புமின்றி பகல் ஒரு மணியளவில் களக்காட்டிற்கு வரும்படி செய்துவிட்டான். நண்பகலில் கோவில் திறந்திருக்குமா ? கண்ணனை காண முடியுமா ? குறைந்தபட்சம் கோவில் மண்ணையாவது வணங்கிவிட்டு வருவோம் என்று தலமிறங்கினோம்.
கதவிடுக்கு மூலமாக அவன் திருக்கோலம் கண்டு மகிழ்ந்தோம். அந்த மாயாவி அத்துடன் விடாமல் நாங்கள் கோவிலில் நின்று கொண்டிருப்பதை திரு. SRS மணியன் அவர்களுக்கு காட்டிக் கொடுத்தான் அந்த மாயச் கறுத்த சிறுவன்.
திரு. மணியன், எங்கள் முன்னோர்கள் இந்த புண்ணிய தலத்தில் பிறந்து வளர்ந்த விவரம் எங்களிடமிருந்து அறிந்த பின் எங்களை கோவிலுக்குள் வருமாறு அன்புடன் அழைத்தார்.
அந்த சந்தான பாலகனை பாட ,வரிகளை, வார்த்தைகளை தேடினோம் ஆனால் அனைத்தும் அந்த ஊத்துகாடு வேங்கட கவிராயர் முன்னமே இவனை பற்றி களிப்புடன் பாடிக்கொண்டிருந்தார்.
என்ன ஒரு தெய்வ சங்கல்பம்.
இந்த கிருஷ்ணனை ஆராதிப்பவர்கள் இவனுக்கே இராமனாகவும் அலங்கரித்து ஒவ்வொரு வருடமும் பங்குனி /சித்திரை மாதத்தில் இராம நவமியில் வணங்கி மகிழ்கின்றனர். இந்த வருடம் 128 வது ஆண்டாக இந்த உற்சவத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
அதோடு இயற்கை நடத்தும் பேரதிசயமாக மார்ச் 21ம் தேதி மற்றும் செப்டம்பர் 21ம் தேதி (“vernal equinox” (spring equinox) and the “autumnal equinox” (fall equinox))இரண்டு நாளும் ( இந்த இரு நாட்களிலும் பகலும் இரவும் சம அளவில் இருக்கும் )இந்த மாயக் கண்ணனை அந்த சூர்ய நாராயணர் தன் கிரணங்களால் முழுவதுமாக ஆர தழுவுவதாக திரு மணியன் அவர்கள் தன் கைப்பேசியில் சேமித்து வைத்துள்ள நிழற்படங்களை நமக்கு காண்பித்து பரவசமூட்டினார்.கண்ணனின் நாமத்தை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மணியுடன் தெரிவித்து அவனை பற்றி பாடல்களை, பாசுரங்களை, சுலோகங்களை ஒலிக்க ஒரு கருவியை இந்த தெய்வீக மணம் கமிழும் கோவிலுக்கு காணிக்கையாக்க முயன்று வருகிறோம். அன்பர்கள் பலரும் இணைந்து வழங்கலாம் என்பது எண்ணம்.
களக்காடு சத்தியவாகீஸ்வரன் கிருஷ்ணகுமார்
17.மே.2022










Super Kumar. I would like to participate
ReplyDelete