Marayanam - Book launching soon மராயணம் விரைவில்

 

இந்த பிரபஞ்சம் யாரையும் ஒரு செயலை செய்ய தூண்டும் முன்பு அதற்கு தயார்படுத்துகிறது.

வேடுவராக பல ஆண்டுகள் வாழ்ந்த பின் திரு. ரத்னாகரரை தீடீரென்று வன்னி மரத்தினடியில் தவமியற்ற வைக்கிறது. அந்த தவம் வேடுவரை மாபெரும் முனிவராக்குகிறது. அந்த பிரபஞ்ச பேராற்றல் அந்த மனிதனின் மனம் என்ற தளத்தில் இந்த பூமியை ஆள எத்தகைய அரசன் வேண்டும் என்று சிந்திக்க தூண்டுகிறது.

 வன்னிமரத்தினடி தவம் அந்த முனிவனை இயற்கையோடு இரண்டற கலக்க வைக்கிறது. கரையான்களால் கூட அவன் ஒரு மனித உடல் என்று உணராமல், ஒரு உன்னதத்தை தாங்கி நிற்கும் எங்கும் பூரணமாக நிறைந்திருக்கும் பேராற்றலாக உணர்ந்து, அந்த இறைக்கு கரையான்கள் மண்ணிலேயே கோவில் எழுப்பி அவனை மூடச் செய்து அவன் இறை நிலையை இரவு பகலாக பாதுகாத்து வந்தபின் அந்த வன்னி மரத்தின் அடியில் அவன் "மர"த்து போயிருந்த போது ஒரே ஒரு சலனமாய் ஒரு இலை மெல்லிய பூங்காற்றில் அவன் உடலில் உள்ள அங்கமெங்கும் நுழைந்து வாயின் உதட்டருகே இருந்து மெல்லிய இடைவெளியில் "மரா மரா மரா" என்று ஒலி"யாக" வெளி வந்தது. அந்த மெல்லிய ஒலியின் மணம் அந்த வனமெங்கும் பரவியது.


பல உயிர்கள் அந்த ஒலி உரசியதால் உயிர் பெற்றன. அந்த வான் எங்கும் அந்த வன்னி மரத்தினடி முனிவனின் மனத்தின் மணம், அந்த ஆன்மாவின் மகரந்தம் பரவ தொடங்கி பல வண்டுகளின் ரீங்காரமாக பல தேனீக்களின் வாய் மொழி தேனாக ஒரு மாபெரும் கவியரங்கமே அங்கு நடைபெற்றது.

வன்மீகம், வான் மிக பரவி, அந்த ஆன்மாவின் மனதின் ஓலி, ஒளியாகி உருவமற்ற அந்த பேராற்றல் அவன் மனதின் உள் செய்ததால் "செய் உள்" ஆகி செய்யுள் ஆக "இராமயணம்" ஆக மலர்ந்தது.

ஏன் "வான்மீகி"யை அந்த பிரபஞ்சம் தேர்ந்தெடுத்து ஒரு காவியம் படைக்க தூண்டியது என்று தேடப் போக "மராயணம்" பிறந்ததது.

ஒரு கறுத்த சிறுவனை காடுகளில் பயணம் செய்ய வைத்து வனங்களின் வாசம் நுகரச் செய்து மரங்களின் மூலம் அந்த பிரபஞ்ச பேராற்றல் வெளிப்படுவதை கண்டு வியக்க வைத்தது. அன்று அந்த வேடுவனை எழுதச் செய்ததே இந்த தேடுவனையும் எழுத தூண்டுகிறது.

ஜப்பானிய விஞ்ஞானிகள் வனத்திற்குள் நடப்பது மனத்தின் சலனத்தை குறைத்து ஆழ்நிலை தியானத்திற்கு இட்டு செல்லக் கூடும் என்கின்றனர். மரத்தினடி மெய்ஞானியும் விஞ்ஞானிகளும் சந்தித்த தருணத்தை, அவர்கள் இணைந்து கட்டிய மனமென்னும் "உன்னத கோவிலில்" அந்த "மர" மென்னும் தவ நிலையை எண்ணி வியப்பதே இந்த "மராயணம்".

இது முழு இணைய புத்தகமாக (இ -புக்) விரைவில் வெளிவர பிரபஞ்ச பேராற்றல் வழி நடத்துகிறது.


    கறுத்த சிறுவன் 

ஜனவரி 2024 ( மார்கழி  அமாவாசை இரவு அன்று எழுதப்பட்டது )


பி.கு. : இயற்கை சூழலின் பின்னணியில் எழுதப்பட்டு வரும் இது போன்ற புத்தகத்தை வெளியிட விரும்பும் பதிபகத்தார் எனது மின்னஞ்சலில் sakritease@gmail.com தொடர்பு கொள்ளலாம் 

Comments

  1. வாழ்த்துகள்! அச்சிடப்பட்ட பதிப்பிலும் பார்க்க நன்றாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல. வெளி வரும் போது தகவல் தருகிறேன்

      Delete

Post a Comment

Popular posts from this blog

GU RU Purnima - Dispelling Darkness to Light

A Pedestrian Paramacharya

Sindoor - door of sins பார் அதி புதுமை பெண்