இரமணாயனம் - பாலும் பழமும்


தன்னைத் தேடி அலைந்து, 
தான் உணர்ந்ததை, 
அவனே சிவன்,
 சிவனே அவன் என்று,

 சவம் சிவமாகும் வித்தையை சமர்ப்பிக்க, 
அசலமாய் நிற்கும் அருணனிடம் அடைக்கலமானார். 

சத்தங்கள் சாதிக்காததை, 
மௌன மொழியால் கற்பித்தார். 
கல்லையும் முள்ளையும் கழியின் துணையோடு, 
கடந்தார் கௌபீனன்! 

ஆடை நிறைந்தவனின் ஆசை, 
உள்ளத்தில் நிறைந்து 
ஓசையுடன் ஓலமிட்டது. 

காஞ்சியில் தஞ்சம்,
 பாண்டிக்கு ஒரு படையெடுப்பு!

அருணியைத் தேடி 
அலைந்தது ஓர் அருணி!

அருணையின் அடிவாரத்தில், 
அருணி நிகழ்ந்தது!

கண்ணோடு கண்கள் நோக்க, 
கண்மணிகள் ஆட மறுக்க
அசலமானது, 
அனைத்துமே!

விஞ்ஞானம் தாண்டிய 
மெய்ஞானம் விளங்கியது!

*பால்* எனும் பாலகன்,
*கேள்* எனும் சொல் மறந்தான்
*கேள்வியை வேள்வியாக்கு* என வேலையாள் வேகப்படுத்தினான்!

கேட்பவன் உண்டு
பதிலும் உண்டு 
ஆனால் கேள்விகள் எங்கே!

மனதின் மயக்க வயலில், 
ஒரு மூச்சு முழுதாய் மேய்ந்தது!

ஆடை இல்லாதவர், 
ஆடை அணிந்தவருக்கு,
 தன் அருளால் புத்தாடை அணிவித்தார்!

சந்தித்த சாதுக்களின் உறவால்
 சாதித்த 
சிந்தனைகளும் *பாலுடன்*
 சேர்ந்து அருணையில் அணைந்தன!

இடையாடை அணிந்தவன் முன் 
உரையாட மறந்தார்!

ரமணா மனிதனா ?
மலை போல் நிலைகொள் அருளே!

திசைதிருப்பலே அவன் தீர்ப்பு!
எனவே
அவன் பணியில் அடைக்கலமாகு!
அவன் பரிணாமத்தில் பரவசமாகு! 

ஒரு முறை படித்து உணர முடியாது. 
ஆனால் படிக்கப் படிக்க நடக்கும் படையெடுப்பு!

கவிஞர் கோபாலாக்ஷி

கவிஞர் கோபாலாக்ஷி - பாரதியை நித்தம் நித்தம் நினைத்து பார்த்து பூரிக்கும் ஒரு மனிதர், பல மொழிகளில் பா எழுதிய ஆசிரியரின் பாச மகள், உறவையும் நட்பையும் அரவணைப்பதில் ஆரோவில் ஆரவிந்தரை போன்ற அன்னை அவர். பொதிகை மலை சாரலில் பிறந்து அவர் "வைகை" என்று முடிவெடுத்தால் மீனாட்சியின் அருளால் அதனை கவிதையாய் வார்த்தெடுப்பார்.

அவர் நாம் கடந்த மாதத்தில் எழுதிய ஆங்கில கவிதை " Address Ramana " https://kalakaattu-kavirayar.blogspot.com/2025/03/adddress-ramana.html
என்ற கவிதையை படித்தும் பதில் எதுவும் தரவில்லை என்று சிந்தித்து கொண்டிருக்கும் போது திடீரென்று அதன் தமிழாக்கத்தை மேலும் செழுமையாக வடித்து எனக்கு அனுப்பினார். 

இதுவும் அந்த அசையாத மலையின் அசைகின்ற உணர்வாய் நம்மிடையே வலம் வந்த ரமணத்தை பாட அந்த அரவிந்தமே அவரை பணித்ததோ என்று வியக்கிறேன். வியப்பின் ஊடே இந்த இரமணாயனத்தை சமர்பிக்கிறேன்.

களக்காட்டு கவிராயர்
kalakaattu Kavirayar
19 May 2025

Comments

Post a Comment

Popular posts from this blog

GU RU Purnima - Dispelling Darkness to Light

A Pedestrian Paramacharya

Sindoor - door of sins பார் அதி புதுமை பெண்